#Breaking: ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்..
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் அருள், சிவசக்தி, தமாகாவை சேர்ந்த ஹரிஹரன், அதிமுக பிரமுகர் மலர்க்கொடி, பாஜக பிரமுகர் அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் உள்ளிட்ட 18 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பலர் கைது செய்யப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பி.ஆனந்தன் நியமிக்கப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் மறைவை தொடர்ந்து அவரது மனைவி பொற்கொடிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான பரபரப்பே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையொட்டி சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் குழந்தையை கடத்தி விடுவோம் எனவும், அவரது குடும்பத்தினரைக் குண்டுவீசி கொலை செய்துவிடுவதாகவும் கடிதம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரின் பாதுகாப்பு கருதி போலீஸார் அவரது வீட்டின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


