#BREAKING : மக்களே உஷார்..! தமிழ்நாட்டில் இந்த மருந்தை விற்பனை செய்ய தடை..!

 
1 1

பீகார் மாநிலம், ஹாஜிப்பூர் வைஷாலியில் உள்ள ட்ரிடஸ் ரெமிடீஸ் (Tridus Remedies) நிறுவனத்தின் தயாரிப்பான ‘அல்மான்ட் கிட் சிரப்’ (Almond Kid Syrup) மருந்தில், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நச்சுப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டுத் துறை நடத்திய சோதனையில், இந்தச் சிறுவர்களுக்கான சிரப்பில் ‘எத்திலீன் கிளைகால்’ (Ethylene Glycol) என்ற வேதிப்பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த மருந்தை உடனடியாகத் தடை செய்யுமாறு அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறைகளுக்கும் மத்திய அரசு அவசரக் கடிதம் அனுப்பியுள்ளது.

எத்திலீன் கிளைகால் என்பது பொதுவாக வாகனங்களில் உறைபனித் தடுப்பானாக (Antifreeze) பயன்படுத்தப்படும் ஒரு நச்சு வேதிப்பொருளாகும். இது மனித உடலுக்குள் சென்றால் சிறுநீரகங்கள், மூளை மற்றும் நுரையீரல் ஆகிய முக்கிய உறுப்புகளைக் கடுமையாகப் பாதிக்கும். குறிப்பாகச் சிறுவர்களுக்கு இந்த மருந்தை அளிக்கும்போது, அது மிகக் குறுகிய காலத்தில் சிறுநீரகச் செயலிழப்பை ஏற்படுத்தி உயிரிழப்பிற்கு வழிவகுக்கும் என்பதால், மருத்துவ உலகம் இந்த விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்த மருந்து விற்பனைக்குத் தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில், தற்போது தமிழக அரசும் இதற்கு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இந்த மருந்தின் விநியோகத்தைத் தடுக்கத் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒருவேளை இந்த மருந்து விற்பனை செய்யப்படுவது தெரிந்தால் அல்லது இது தொடர்பான புகார்களைத் தெரிவிக்க விரும்பினால், பொதுமக்கள் 94458 65400 என்ற அதிகாரப்பூர்வ எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.