#BREAKING பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை..!!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு , சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இதில் பாதிக்கப்பட்ட மாணவி மறுநாள் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிஐகு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், சினேகா பிரியா, பிருந்தா, அய்மன் ஜமால் ஆகிய 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

புலனாய்வுக் குழுவின் விசாரணையின் அடிப்படையில் ஞானசேகரனை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி சைதாப்பேட்டை 9வது குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். அதன் பின்னர் இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் சாட்சிகள் விசாரணை ஏப்ரல் 23ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் தினம் தோறும் என்கிற அடிப்படையில் வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. 75 சாட்சிகளின் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 29 பேர் சாட்சி அளித்துள்ளனர். அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 20ஆம் தேதி முடிவடைந்த நிலையில் , வழக்கின் தீர்ப்பை 28ஆம் தேதி வழங்குவதாக சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி ஒத்திவைத்திருந்தார்.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இந்த வழக்கில் கடந்த புதன்கிழமை 28ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி ஞானசேகரன் குற்றவாளி எனவும் அவர் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபனமாகியுள்ளதாகவும், அவருக்கான தண்டனை விவரங்கள் ஜூன் 2ம் தேதி அதாவது இன்று அறிவிக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி என்று அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகருக்கு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன முன்னதாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்திற்கு ஞானசேகரன் அடுத்து வரப்பட்டார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனையும் ரூ. 90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. சிறையில் ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்கப்படக்கூடாது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மாணவி வன்கொடுமை வழக்கை சிறப்பாக விசாரித்த காவல்துறைக்கு நீதிபதி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.


