#BREAKING : நிதி நிறுவன மோசடி புகார் - தேவநாதன் யாதவ் கைது..

 
Dhevanathan Yadav Dhevanathan Yadav

 நிதி நிறுவன மோசடி புகாரில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், வின் தொலைக்காட்சி அதிபருமான தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார்.  மயிலாப்பூர் சிட் பண்ட் நிதி நிறுவனத்தில் ரூ.500 கோடிக்கு மேல் மோசடி செய்த புகாரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.  

சென்னை மயிலாப்பூரில் தெற்கு மாட வீதியில் செயல்பட்டு வரும் ‘தீ மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனம்’ கடந்த 1872ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 150 ஆண்டுகள் பழைமையான இந்த நிதி நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக உள்ளனர்.  இதில் பெரும்பாலும் ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களது  பணத்தை அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிதி நிறுவனம் முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி வழங்கி வருவதாக அறிவிக்கப்பட்டது. பல்வேறு வகையான திட்டங்களில் ரூ.1 லட்சம் - ரூ. 10 லட்சம் வரையிலும், ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலும் என கோடிக்கணக்கான பணம்  வைப்பு நிதியாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிதி நிறுவனத்தின் தற்போதைய தலைவராக இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், வின் தொலைக்காட்சி அதிபருமான தேவநாதன் யாதவ் இருந்து வருகிறார்.  இந்நிலையில் இந்த நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் வைப்பு நிதி ரூ.525 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  காணாமல் போனதாக கூறப்படும் 525 கோடி ரூபாய் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டதா? எனவும் வாடிக்கையாளர்கள் சந்தேகிக்கின்றனர். 

மோசடி

ஆம், இந்நிறுவனத்தின் தலைவராக உள்ள தேவநாதன் யாதவ், நடடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார்.  இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களு  கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து வைப்பு நிதியின் வட்டித்தொகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.  வட்டிப் பணத்தை பெற நிதி நிறுவனத்தை அணுகினால்  அலைக்கழிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதுவரை நேரடியாக வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டுவந்த நிலையில்,  சாப்ட்வேர் கோளாறு காரணம் எனக்கூறி பணம் கேட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு காசோலைகளாக கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

அந்த காசோலைகளை பயன்படுத்தி பணத்தை எடுக்க வங்கிகளுக்குச் சென்றால்,  நிதி நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த  வாடிக்கையாளர்கள், தங்கள் வைப்பு நிதியை திரும்பப் பெறவும், வட்டி பணத்தை வாங்கவும்  நிதி நிறுவனத்திடம் முறையிட்டால் ஏதேதோ காரணங்களைச் சொல்லி  திருப்பி அனுப்பப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். 

அத்துடன் நிதி நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முதலில் சிட்டி யூனியன் வங்கியில் இருந்ததாகவும்,   அதன்பின் கரூர் வைசியா வங்கிக்கு மாற்றப்பட்டதாகவும் நிர்வாகம் தரப்பில் தெரிவித்த நிலையில், தற்போது ஆக்சிஸ் வங்கிக்கு நிதி நிறுவனத்தின் வங்கிக்கணக்கு  மாற்றப்பட்டதாகவும், அதனால் தான்  வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுப்பதில் கால தாமதம் ஆவதாகம் நிதி நிறுவனம் காரணம் சொல்வதாக கூறுகின்றனர். 

தேவநாதன் யாதவ்

இந்த நிலையில் தான் சிவங்கங்கை பாஜக வேட்பாளராக தேவநாதன் அறிவிக்கப்பட்டது, வாடிக்கையாளர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.   ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம், ஹிஜாவு மற்றும் ஐஎஃப்எஸ் நிறுவனத்தின் மூலமாக அதிக வட்டி தருவதாக கூறி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பொதுமக்களிடம் மோசடி செய்யப்பட்டதாக வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், தற்போது மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்திலும் பணம் இல்லை என அலைக்கழிக்கப்படுவது ஒரு பக்கம் வாடிக்கையாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக நிதி நிறுவனத்தின் 525 கோடி ரூபாய் பணத்தை நாடாளுமன்றத் தேர்தலுக்காக செலவிட்டுள்ளார்களா என சந்தேகிக்கும் வாடிக்கையாளர்கள்  இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், வின் தொலைக்காட்சி அதிபருமான தேவநாதன் யாதவை கைது செய்துள்ளனர்.  புதுக்கோட்டையில் பதுங்கியிருந்த அவரை கைது செய்து, சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.