#BREAKING எட்டாக் கனியாகும் தங்கம்..!! சவரன் ரூ.57,000 தாண்டி புதிய உச்சம் தொட்டது..
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி ஒரு சவரன் ரூ.57,000ஐ தாண்டி விற்பனையாகிறது.
உள்நாட்டில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு, போர் மற்றும் தேர்தல்கள் என உலக நாடுகளில் நிலவும் அசாதாரன சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை ஏற்றம் கண்டு வருகிறது. அவ்வப்போது தங்கத்தின் விலை குறைவது போல போக்கு காட்டி வந்தாலும், கணிசமாக விலை ஏற்றம் கண்டிருப்பதை காண முடிகிறது. கடந்த மாதம் இறுதியில் இருந்து அதிரடியாக ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலை, கடந்த 4ம் தேதி புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ. 56,960க்கு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் வெள்ளி விலையும் புதிய உச்சமாக கிராம் ரூ.103க்கு விற்கப்பட்டது.
அதன்பிறகு விலை குறைவதும், உயர்வதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 11ம் தேதி ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 560 ம், 12ம் தேதி சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்தது. அன்றைய தினம் மீண்டும் ஒரு கிராம் ரூ.7,120, ஒரு சவரன் ரூ.56,960 என கடந்த 4ம் தேதி விற்பனையான அதே உச்ச விலையை எட்டியது. அதன்பின்னரும் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்கம் விலை, இன்று ஒரே அடியாக புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 57,000 ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 7,140 ரூபாய்க்கும், ஒரு சவரன் 57,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் 103 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.