#Breaking: பட்ஜெட் எதிரொலி : தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,080 சரிவு
பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
2024 - 2025ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்திற்கான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15%ல் இருந்து 6% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் பிளாட்டினம் மீதான சுங்கவரி 15.4%ல் இருந்து 6.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக குறைந்திருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரன் 54,600 ரூபாயாகவும், ஒரு கிராம் ரூ. 6,825 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
பின்னர் இன்று காலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.54,480க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேபோல் ஒரு கிராம் ரூ.6,810க்கு விற்கப்பட்டு வந்தது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட பின்னர் அதிரடியாக தற்போது தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,080 குறைந்திருக்கிறது. அதேபோல் கிராமுக்கு ரூ.260 குறைந்து சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் தங்கம் ரூ.6,550க்கும், ஒரு சவரன் ரூ.52,400க்கும் விற்கப்படுகிறது.
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையில் அதிரடியாக சரிந்துள்ளது. இன்று காலை வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ.95.60 க்கு விற்பனையானது. இந்நிலையில் தற்போது வெள்ளி விலையும் அதிரடியாக கிலோவுக்கு ரூ.3,100 குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் 3 ரூபாய் 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.92.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.