#Breaking: கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான நாதக முன்னாள் நிர்வாகி சிவராமன் உயிரிழப்பு..
கிருஷ்ணகிரி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன் உயிரிழந்துள்ளார். எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சிவராமனுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் போலியாக என்.சி.சி முகாம் நடத்தி 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நாதக முன்னாள் நிர்வாகியான, போலி என்.சி.சி. மாஸ்டர் சிவராமன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தலைமறைவான சிவராமனை 19ம் தேதி போலீஸார் கோவையில் வைத்து கைது செய்தனர். முன்னதாக போலீசார் தேடுவதை அறிந்த சிவராமன் எலி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்று இருக்கிறார், தலைமறைவாக இருந்த போதே அதாவது கடந்த 16- 18 ஆம் தேதிகளிலேயே அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். போலீஸ் விசாரணையின் போது தான் எலிபேஸ்ட் சாப்பிட்டுவிட்டதாக தெரிவித்திருக்கிறார். அத்துடன் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது கால் உடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், மருத்துவ சோதனையிலும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அவருக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு அவருக்கு மூச்சு திணறல் அதிக அளவில் இருந்ததன் காரணமாக மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு அவர் கொண்டுவரப்பட்டார். நேற்று முழுவதும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 5:30 மணி அளவில் சிவராமன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்திருக்கிறார். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.