#BREAKING நடப்பு கல்வியாண்டு முதல் + 1 பொதுத்தேர்வு ரத்து - புதிய கல்விக் கொள்கையில் வெளியீடு..!
நடப்பு கல்வியாண்டு முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கென மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கவும் முடிவு செய்து தமிழக அரசு அதற்காக கடந்த 2022ம் ஆண்டு ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில், 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் என பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டு, புதிய மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைத்துள்ளனர். 650 பக்கங்கள் கொண்ட மாநில கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை இந்தக்குழு கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி அந்த அறிக்கை மாநில அரசிடம் சமர்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த புதிய மாநிலக் கல்விக்கொள்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து மாநில கல்விக் கொள்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். கொள்கை வரையறை குழு பரிந்துரையின்படி, தமிழ் , ஆங்கிலம் ஆகிய இருமொழி கொள்கையே கடைபிடிக்கப்படும் என்றும், 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி நடைமுறை தொடரும் என்றும் தெரிவித்தார். அத்துடன் நடப்பு கல்வியாண்டு முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார். 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.


