#BREAKING : ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்..!!

 
A A
தமிழ்நாட்டில் இருந்து பயணிகளின் வசதிக்காக கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரி செலுத்தாமல் இயக்கப்படுவதாகக் கூறி, கடந்த வெள்ளிக்கிழமை தமிழக பதிவெண் கொண்ட 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்த கேரள போக்குவரத்துத் துறை, தலா ரூ.2 முதல் ரூ.3 லட்சம் என ரூ.70 லட்சம் வரை அபராதம் விதித்தது.
கேரள அரசின் இத்தகைய நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் சேவை சனிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக தொடரும் இந்த போராட்டத்தால், ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் மட்டுமின்றி, பயணிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், அண்டை மாநிலங்களில் தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு இருக்கை அடிப்படையில் குறைந்தபட்சமாக ரூ.4,500 வரி விதிப்பின் அடிப்படையில் பணம் வசூல் செய்து வருகின்றனர். இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோடிக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி வாங்கிய பேருந்துகளை இயக்க முடியாமல் தவிப்பதாகவும், இந்த விஷயத்தில் தலையிட்டு தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக, தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை. இதனால், கடந்த 18 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் 700-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் இயக்கப்படாததால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில் மாநிலங்களுக்கு இடையிலான ஆம்னி பேருந்து சேவைகள், 18 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இன்று தொடங்கப்படுகிறது, போராட்டம் வாபஸ் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்