#BREAKING : திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு..!

 
1 1

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று (டிசம்பர் 3) கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது. வழக்கமாக, மலையின் உச்சியில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் மட்டுமே 1920 ஆம் ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. ஆனால், நீண்ட நாட்களாக இந்து முன்னணி உள்ளிட்ட பக்தர்கள் அமைப்புகள், மலை உச்சியில் உள்ள பழைய தீபத்தூணிலும் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

இந்தச் சூழலில், எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டார். இந்தத் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து கோயில் செயல் அலுவலர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், அந்த மனு விசாரணைக்கு வருவதற்கு முன்னரே, பக்தர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்த்தனர்.

எனினும், கோயில் நிர்வாகம் வழக்கம் போல் உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் மட்டும் கார்த்திகை தீபத்தை ஏற்றியது; நீதிமன்ற உத்தரவுப்படி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மதுரை ஆட்சியர் மற்றும் போலீஸ் கமிஷனருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், இன்று மாலை 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும்; இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். தீபம் ஏற்றப்படாததால், மனுதாரர் உட்பட 10 பேர் சிஐஎஸ்எஃப் (CISF) பாதுகாப்போடு சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவுப்படி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாததால், கோயில் முன்பு பதட்டமான சூழல் உருவானது. அங்கு திரண்டிருந்த இந்து முன்னணி அமைப்பினர் மலை உச்சிக்கு செல்ல முயன்றபோது, அவர்களைத் தடுத்த போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இரண்டு காவலர்கள் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. இதன் காரணமாக, திருப்பரங்குன்றம் பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவுவதைத் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

திருப்பரங்குன்றத்தில் கூட்டம் கூட தடை விதித்து மதுரை காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவு


நீதிமன்ற உத்தரவுபடி தீபத் தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் எனக் கூறி இந்து முன்னணி போராட்டம்; ஏராளமானோர் திரண்டு போராடியதால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர 144 தடை உத்தரவு