#Breaking: சர்ச்சைகளுக்கு இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு..

 
#Breaking: சர்ச்சைகளுக்கு இடையே  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன்  திருமாவளவன் சந்திப்பு..  


சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை,  விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்தார்.  இந்த சந்திப்பில் திமுக மற்றும் விசிகவின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். 

 திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வருகிற அக்.2ம் தேதி கள்ளக்குறிச்சியில் மதுஒழிப்பு மாநாடு நடத்த உள்ளது. இதில்  அதிமுக, விஜய்யின் தவெக உள்பட மதுஒழிப்பில் பங்கேற்க விரும்பும் கட்சிகள் கலந்துகொள்ளலாம் என அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார்.  திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அத்துடன் ஆட்சியில் பங்கு , அனைவருக்கும் அதிகாரம் என்று திருமா பேசிய காணொலி வைரலானதும் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.  

thiruma

இதனையொட்டி திமுக - விசிக கூட்டணியில் விரிசல்,  திருமாவளவன் பேசியது சரியான விஷயம் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவரும் கருத்துக் கூற தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் “எப்படியாவது கூட்டணியில் பிளவு ஏற்பட்டுவிடாதா என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் தற்போதுவரை திமுக கூட்டணியில்தான் விசிக உள்ளது” என்று திருமாவளவன் கூறியிருந்தார்.  மேலும், மது ஒழிப்பு மாநாட்டிற்கு முதலமைச்சரை அழைக்க உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். 

 இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக  தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் சந்தித்துப் பேசினார்.  இந்த சந்திப்பின் போது  திமுக பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி உள்ளிட்டோரும்,  விசிக எம்.பி, ரவிக்குமார்  உள்பட திமுக மற்றும் விசிகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.