#BREAKING திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் தம்பிக்கு அரசு வேலை..!! இலவச வீட்டு மனை பட்டா..

 
திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப் பணி திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப் பணி

திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப் பணிக்கான ஆணையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.  

நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட  திருப்புவனம் இளைஞர் அஜித்குமார்(27) , போலீஸாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்தார். கோவிலுக்கு பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் வைத்து போலீஸார், அஜித்தை தாக்கும் வீடியோ காண்போரை கலங்கச் செய்கிறது.  இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திருப்புவனம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் காவலர்கள் கண்ணன், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய  6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.  பின்னர் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டதை தொடர்ந்து,   5 காவலர்கள்  கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

 


மேலும் இளைஞர் அஜித் கொலை வழக்கை  சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.  இந்நிலையில் சிவகங்கை எஸ்.பி., ஆஷிஸ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ராமநாதபுரம் எஸ்.பி., சந்தேஷுக்கு  சிவகங்கை எஸ்.பி.,யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  வழக்கு மாற்றப்பட்டதுடன் உடனடியாக சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து மானாமதுரை டி.எஸ்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  

இந்த சம்பவம் தொடர்பாக  வருத்தம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு! கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்!” என்று தெரிவித்திருந்தார்.  

 திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப் பணி

அத்துடன் உயிரிழந்த அஜித்குமாரின் பெற்றோரிடம் நேற்று உரையாடிய  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த துயர சம்பவத்திற்காக மன்னிப்புக் கோரினார்.  மேலும், கவலைப்பட வேண்டாம்;  அரசு எப்போதும் உங்களுடன் துணை நிற்கும் என்றும் தெரிவித்திருந்தார்.   

இந்நிலையில் தற்போது  திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் தம்பி , நவீன்குமாருக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது. அரசுப்பணிக்கான ஆணையை அமைச்சர் பெரியகருப்பன், நவீன்குமாரிடம்  வழங்கினார்.  மேலும் குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது.