#BREAKING : விஜய் உயிருக்கு ஆபத்து... புயலை கிளப்பிய நயினார்..!
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது:-
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் விஜய் இன்னும் மக்களை சந்திக்கவில்லை. விஜய் கரூர் சென்றால் அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. விஜய்யின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? என்று யோசிக்க வேண்டும். அதற்காகவே அவர் பாதுகாப்பு கோரி உள்ளார். இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசு தனது பொறுப்பை தட்டிக் கழித்து வருகிறது.உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் தான் தற்போது வரை விஜய் கரூருக்கு செல்லாமல் இருக்கலாம்.
சொத்து வரி மற்றும் மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தி.மு.க. அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
மேலும், ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. கேங்மேன், ஆசிரியர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த "விடியாத அரசு" 2026 தேர்தலில் மக்களிடம் தகுந்த பதிலைப் பெறும்.
திண்டுக்கல்லில் நீட் தேர்வில் மாணவி ஒருவர் குடும்பத்துடன் சேர்ந்து மோசடி செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியவர்கள் இன்னும் அதை செய்யவில்லை. இப்போது நீட் தேர்விலேயே வந்து நிற்கிறார்கள். நீட் தேர்வு மூலம் சாதாரண குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பு கிடைக்கும். மேலப்பாளையத்தில் 10 பேருக்கு இடம் கிடைத்துள்ளது.
எந்த கட்சி சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெறும் என்று திருமாவளவன் கூறுகிறார். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அவர்கள் வெற்றி பெறுவோம் என்றுதான் சொல்வார்கள். ஆனால், இறுதியில் தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றி பெறும்.
வருகிற 12-ந்தேதி திட்டமிட்டபடி எனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் நடைபெறுகிறது.மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கரூர் விவகாரத்தைத் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் சுற்றுப்பயணத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது. அரசும், காவல்துறையும் கொடுக்கும் அனுமதியின்படி சுற்றுப்பயணம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.


