சென்னை விமான நிலையத்தில் மீண்டும் உடைந்த கண்ணாடி கதவு..!! பயணிகள் அச்சம்..

 
சென்னை விமான நிலையத்தில் மீண்டும் உடைந்த கண்ணாடி கதவு..!! பயணிகள் அச்சம்..

சென்னை விமான நிலையத்தில் சர்வதேச முனையத்திலிருந்து உள்நாட்டு முனையத்திற்கு, டிரான்சிட் பயணிகள் வரும் வழியில் உள்ள கண்ணாடி கதவு திடீரென உடைந்து நொறுங்கியது. 

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வருகைப்பகுதியில் 5 ஆம் எண் கேட் வழியாக, பயணிகள் வெளியில்  வருவார்கள். அந்தப் பயணிகளில் சர்வதேச விமானத்தில் வந்து, உள்நாட்டு விமானத்தில் பயணிக்க வேண்டிய டிரான்சிட் பயணிகள், அதன் அருகில் உள்ள மற்றொரு கேட் வழியாக, உள்நாட்டு விமான நிலையத்திற்குள் செல்வார்கள். விமான நிலைய ஊழியர்களும் அந்த கேட்டை பயன்படுத்துவார்கள். இந்த நிலையில் இன்று காலையில் திடீரென ட்ரான்சிட்  பயணிகள், விமான ஊழியர்கள் செல்லக்கூடிய அந்த கேட்டில்  இருந்த  ஒரு கண்ணாடி கதவு, திடீரென உடைந்து நொறுங்கியது. கீழே சிதறி விழும் ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டு இருந்தது. இதனால் டிரான்சிட் பயணிகள் அந்த வழியில் செல்வதற்கு பயந்து, வெளியே நின்று கொண்டு, விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். 

சென்னை விமான நிலையத்தில் மீண்டும் உடைந்த கண்ணாடி கதவு..!! பயணிகள் அச்சம்..

உடனடியாக விமான நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து, அந்த கேட் வழியாக யாரும் செல்லாதபடி கேட்டை  மூடி வைத்துள்ளனர். அதோடு பயணிகள் அனைவரையும் மாற்று வழியில், உள்நாட்டு விமான நிலையத்திற்கு செல்வதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதற்கிடையே இந்த கண்ணாடி கதவு எப்படி உடைந்தது? என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். பயணிகள் யாராவது தங்களுடைய உடைமைகளை எடுத்துச் சென்ற ட்ராலியை, கண்ணாடி கதவு மீது மோதி கண்ணாடி உடைந்ததா? இல்லையேல் தானாக உடைந்து விட்டதா? என்று விசாரணை நடத்துகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும், அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

மேலும் உடைந்த கண்ணாடி கதவை அகற்றிவிட்டு, வேறு கண்ணாடி கதவு பொருத்துவதற்கான  நடவடிக்கைகள் உடனே எடுக்கப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே இருந்த பழைய கட்டிடத்தில், தொடர்ச்சியாக சுமார் 90 முறைகள், கண்ணாடி கதவுகள் உடைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த புதிய முனையங்கள் செயல்பாட்டிற்கு வந்த பின்பு, கண்ணாடி உடைவது நின்று இருந்தது. இந்த நிலையில் தற்போது இன்று, மீண்டும் சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு ஒன்று உடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.