Budget 2024 : முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட தமிழ்நாடு.. இது ஆந்திரா, பீகாருக்கான பட்ஜெட்..

 
நிர்மலா சீதாராமன் நிர்மலா சீதாராமன்

2024 - 2025ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  


நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் மீதும் பெரும் எதிர்ப்பார்ப்புகள் இருந்து வந்தது.  தமிழகம் சந்தித்த இரு வெள்ள பேரிடர்களுக்கு நிதி ஒதுக்கப்படும் எனவும், தனிநபர் வருமான வரி விலக்கில் மாற்றம் இருக்கும் எனவும், மெட்ரோ ரயில் திட்டம், ரயில்வே திட்டம், சாலை திட்டங்கள்  உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு  நிதி ஒதுக்கப்படும் என தமிழக மக்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் மத்திய பட்ஜெட் பெரும் ஏமாற்றம் அளிக்கும் விதமாகவே அமைந்திருக்கிறது.  தமிழகத்தை பொறுத்தவரை  கடந்த ஆண்டு சென்னை மற்றும் தூத்துக்குடி மழை வெள்ள பேரிடர்களுக்கு நிவாரண நிதி அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அதேபோல் நேற்று முன் தினம் கூட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள #Budget2024-இல், மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில்  திட்டத்திற்கான நிதி,  தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல்,  10 ஆண்டுகலாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு,  கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல்,  தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்.” என்று குறிப்பிட்டிருந்தார். 

Budget 2024 : முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட தமிழ்நாடு.. இது ஆந்திரா, பீகாருக்கான பட்ஜெட்.. 

ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக இன்றைய பட்ஜெட் அமைந்திருக்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்த  2024 - 2025ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்கிற வார்த்தையே இடம்பெறவில்லை. அதேபோல் கேரளா, கர்நாடகா, தெலங்கானா போன்ற எந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மாறாக கூட்டணிக் கட்சிகள் ஆட்சியமைத்துள்ள ஆந்திர மாநிலத்திற்கு ரூ.15,000 கோடியும், பீகாருக்கு ரூ.26,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. 2024 மக்களவை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் மற்றும் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுன் உதவியுடனே பாஜக ஆட்சியமைத்திருக்கிறது. 

ஆகையால் தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள இந்த மாநிலங்களுக்கு மட்டும் நிதிஒதுக்கியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர். அதேபோல் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் அசாம், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக பட்ஜெட்டில் ரூ.11,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களின் வெள்ள பாதிப்புகளுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்பட்டாதது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் எனவும் கூறுகின்றனர். இந்த பட்ஜெட் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கான பட்ஜெட் எனவும் அரசியல் நிபுணர்கள் சாடியுள்ளனர்.