தற்கொலை செய்துகொண்ட தஞ்சை பள்ளி மாணவி உடலை அடக்கம் செய்யவும் - ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவு..

 
2வது  திருமணம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: உயர்நீதிமன்றக் கிளை எச்சரிக்கை!

தற்கொலை செய்துகொண்ட தஞ்சை பள்ளி மாணவியின் உடலை பெற்று அடக்கம் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ  பள்ளிக்கூடத்தில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி  விடுதி வார்டன்  கொடுமையால்  பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துயது.  அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் என்பவரது மகள் லாவண்யா (17).  தஞ்சை மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைபள்ளியில் படித்து வந்த இவர் அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் லாவண்யா தங்கி வந்துள்ளார். 

பள்ளி மாணவி தற்கொலை

இந்நிலையில் கடந்த 9ம் தேதி லாவண்யா, விடுதியில்  பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விடுதி வார்டன்  தொடர்ந்து கடுமையாக திட்டியதாலும், விடுதியில் உள்ள அறைகளை சுத்தம் செய்ய சொல்லியும், கணக்கு வழக்குகளை பார்க்கச்  சொல்லி கடுமையாக வேலை வாங்கியதாலும், உடல் நிலை சரியில்லாத போது கூட விடுப்பு வழங்காமல் தொந்தரவு செய்ததால் தான் பூச்சி மருந்து குடித்ததாக மாணவி வாக்குமூலம் அளித்திருந்தார். இதனையடுத்து  இதுகுறித்து  திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விடுதி வார்டன் சகாயமேரியை (62) கைது செய்தனர்.

மாணவி தற்கொலை வழக்கு

மாணவியை மதம் மாறச் சொல்லி பள்ளியின் ஆசிரியர்கள் இருவர் கட்டாயப்படுத்தியதால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக புகார் கூறி ஆசிரியர்கள் இருவரையும் கைது செய்யக்கோரி பா.ஜ.க உள்ளிட்ட  இந்து அமைப்பினர்  நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில்  ஈடுபட்டனர். அதேபோல்  மதம் மாறும்படி கூறி வற்புறுத்தியதாலும், தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாலும் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதக , லாவண்யா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  ஆனால் மதமாற்றம் குறித்து வாக்கு மூலத்தில் மாணவி தெரிவிக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

உடல்

இருப்பினும் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்து, மாணவி லாவண்யாவின் உடலை வாங்க பெற்றோர் மறுத்து விட்டனர். இதனால் மாணவியின் உடல் பரிசோதனை முடிந்து மருத்துவ கல்லூரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.   கடந்த 2 நாட்களாக உடலை ஒப்படைக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வந்தனர்.   இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிபதி திங்கட்கிழமை அன்று வழக்கை பட்டியலிட பதிவாளருக்கு  உத்தரவிட்டு உள்ளார். மேலும்  மாணவி லாவண்யாவின் உடலை பெற்றோர் பெற்றுக் கொன்று அடக்கம் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.