பிரேக் பிடிக்காமல் பின்னோக்கி ஓடிய பேருந்து- பயணிகள் அலறியடித்து ஓட்டம்
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் பிரேக் பிடிக்காமல் பின்னோக்கி சென்ற அரசு பேருந்து விபத்துக்குள்ளானது.

நாகர்கோவில் நகரின் மைய பகுதியில் அண்ணா பஸ் நிலையம் உள்ளது.இன்று மதியம் பஸ் நிலையத்திலிருந்து முள்ளூர் துறைக்கு அரசு பஸ் வந்து புறப்பட்டு சென்றது. பஸ்ஸில் குறைவான பயணிகள் இருந்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பின்னோக்கி நகர்ந்தது.டிரைவர் பேருந்தை நிறுத்த முயன்றார். ஆனால் பேருந்தை நிறுத்த முடியவில்லை. பஸ் பின்னோக்கி நகர்ந்து சென்றதால் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னோக்கி வந்த பேருந்து அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர் மீது மோதி நின்றது.
இதைத் தொடர்ந்து டிரைவர் பஸ்சை இயக்க முயன்றார். ஆனால் பஸ்சை இயக்க முடியவில்லை . இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். தடுப்பு சுவரில் மோதி நின்ற பஸ்ஸை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர். பேருந்து பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தடுப்பு சுவர் மீது ஏறி நின்ற பஸ் மீட்கப்பட்டது. இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


