ANNA APP மூலம் பஸ், ரயில், மெட்ரோ டிக்கெட்! சோதனை முயற்சி தொடக்கம்
சென்னையில், மாநகரப் பேருந்துகள், மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் என, அனைத்திலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் வகையில், அடுத்த மாதம் புதிய செயலியை அறிமுகம் செய்கிறது, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம்(CUMTA).
சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகிக் கொண்டே வரும் நிலையில், பெரும்பாலான மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு, பொது போக்குவரத்தான பேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த 3 விதமான போக்குவரத்துகளிலும் பயணம் செய்ய, இதுவரை தனித்தனியாகவே அவர்கள் டிக்கெட்டுகளை வாங்கி வந்தனர். இந்த நிலையில், அனைத்து விதமான போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் முறை அமல்படுத்தப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பிரேத்யேக (ANNA APP தற்காலிமாக பெயர்) செலியை உருவாக்கியுள்ள நிலையில் தற்போது அதன் பணிகள் முடிவடைந்து தற்போது செயலியை சோதனை முயற்சியில் பயன்படுத்தி வருகிறது CUMTA.
புதிய செயலியை CUMTA இந்த மாத இறுதியில் அறிமுகம் செய்ய உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் QR code மூலம், அனைத்து பொது போக்குவரத்துகளிலும் பொதுமக்கள் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் ஆப் (Mobile apps) மூலம் நீங்கள் செல்ல வேண்டிய இடம் மற்றும் புறப்படும் இடம் போன்ற தகவலை உள்ளிட வேண்டும். எத்தனை பயண முறையை தேர்வு செய்கிறீர்கள் என்று தேர்வு செய்ய வேண்டும். இறுதியாக நீங்கள் பயணிக்கும் வழிக்கான மொத்த கட்டணம் காண்பிக்கப்படும். யுபிஐ பேமெண்ட் (UPI Payment) முறையை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தி உங்களுக்கான கியூஆர் கோடு பொறிக்கப்பட்ட தனி பயண சீட்டை (QR code ticket) மொபைலில் பெற்று பயணிக்கலாம்.

டிக்கெட் பெறுவது மட்டுமல்லாமல், இந்த செயலி மூலம், எந்தெந்த பகுதிகளுக்கு எப்படி செல்ல வேண்டும், எந்த வகை போக்குவரத்தை பயன்படுத்தினால் விரைவாக செல்ல முடியும் என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பயணிகள் தெரிந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாள்தோறும் இந்த மூன்று வகை போக்குவரத்துகளிலும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில், புதிய செயலி பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக மாநகர பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது இரண்டு மாதத்திற்கு பிறகு மின்சார ரயில்கள் இந்த செயலியில் இணைக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


