வேட்பாளர்களை விஜய் தான் அறிவிப்பார் - புஸ்ஸி ஆனந்த்
சட்டமன்ற தேர்தலுக்கான தவெகவின் வேட்பாளர்களை விஜய்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்பமனு கொடுப்பவர்களை தனித் தனியாக நேர்காணல் செய்த பிறகே விஜய் அறிவிப்பார் என கட்சித் தரப்பில் கூறுகின்றனர். அதற்கு முன், தமிழக வெற்றிக் கழகத்திற்கு தொகுதி பொறுப்பாளர்களை நியமிக்க விஜய் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு தொகுதியிலும் ஆலோசனை நடத்தி பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார். அதில் முதல் கட்டமாக நேற்று முன்தினம் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று திருச்செங்கோடு தொகுதிக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
திருச்செங்கோட்டில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பேசிய புஸ்ஸி ஆனந்த், “த.வெ.க-வுக்கு அருமையான சின்னம் வரப்போகிறது. நீங்கள் எந்த ஈகோவும் பார்க்காம வேலை செய்யுங்கள். யாராவது ஏதாவது சொன்னா சொல்லிட்டு போகட்டும்னு விட்ருங்க... பாக்கெட்ல இருக்க தலைவர் போட்டோவ எடுத்து பாருங்க எல்லாம் சரி ஆகிடும். சட்டமன்ற தேர்தலுக்கான தவெகவின் வேட்பாளர்களை விஜய்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். விஜய் சொல்வதை அப்படியே பின்பற்றுவோம். ஈரோட்டில் நடைபெறும் தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்தில் எங்கள் அண்ணன் செங்கோட்டையன் கலக்க போகிறார் பாருங்கள். விஜய்யை நம்பி வந்த யாரையும் கைவிட மாட்டோம்.” என்றார்.


