ஆன்லைன் தேர்வு - மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து!!

 
ttn

தமிழகத்தில் கொரோனா  காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டிருந்தது. தற்போது தொற்று  பரவல் குறைந்து வரும் நிலையில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளும் , கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளும்  தொடங்கப்பட்டன.  இதையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த நவம்பர் 1-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.  

tn

கடந்த சில மாதங்களாகவே ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில்,  தேர்வுகள் எழுத்து முறையில் நேரடியாக நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. இந்த சூழலில் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தி விட்டு பருவத் தேர்வுகளை நேரடியாக நடத்தக்கூடாது என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன் பருவத் தேர்வுகளை நேரடியாக நடத்தக்கூடாது என்று பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ttn

இதைத்தொடர்ந்து தமிழக உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகளுக்கும் பருவத் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் , அனைத்து கல்லூரிகளுக்கும் இது பொருந்தும் என்று  உயர் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

POLICE

இந்நிலையில்  ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து மதுரை, கள்ளக்குறிச்சி, சென்னை ,திருச்சி ஆகிய மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது  மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அந்த வழக்குகள் அனைத்தையும் கைவிட முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் அந்த 12 வழக்குகளும் தமிழ்நாடு காவல்துறையால் கைவிடப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்கப்படாது என்று தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.