சாலையில் தேங்கிய மழைநீரில் மூழ்கிய கார்- உயிர் பிழைத்தால் போதும் என ஓடிய ஓட்டுநர்

 
ச் ச்

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தேங்கி இருக்கும் மழைநீரில் சிக்கிய காரில் இருந்து ஓட்டுநர் ஆபத்தை உணராமல் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

காலை முதலே பூந்தமல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பூந்தமல்லி நெடுஞ்சாலை வேலப்பன்சாவடி அருகே இருக்கக்கூடிய சர்வீஸ் சாலையில் காலை முதலே பெய்து வரும் கனமழை காரணமாக சர்வீஸ் சாலை முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்து  வருகிறது. மேலும் இந்த சர்வீஸ் சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கிக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. 

இந்த நிலையில் தேங்கி இருக்கக்கூடிய மழை நீரில் ஆபத்தை உணராமல் வந்த கார் ஒன்று பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. மேலும் கார் ஓட்டுநர் கார் எடுக்க முயற்சித்தும் முடியாத காரணத்தினால் மெல்ல மெல்ல காரானது மழை நீரில் மூழ்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கார் ஓட்டுநர் உடனடியாக காரை விட்டு, உயிர் பிழைக்கும் படி தப்பி ஓடிய சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து தேங்கியிருக்கக் கூடிய மழை நீரில் வாகனங்கள் சிக்கிக் கொள்ளும் சம்பவம் அரங்கேறி வரும் நிலையில் உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்படுவதற்கு முன்பாக காவலர்கள் இந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.