கஸ்தூரி மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகள்!
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரி மீது திருச்சியில் மூன்று பிரிவுகளின் கீழும், மதுரையில் 6 பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசுகையில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து தரக்குறைவாகவும் அவதூறான கருத்துக்களையும் பேசினார். இது தெலுங்கு பேசும் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் புகார் மனு அளிக்கப்பட்டது. சென்னையில் நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த ரெட்டி நல சங்க தலைவர் செல்வராஜ் என்பவர் திருச்சியை மாநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் நடிகை கஸ்தூரி மீது மதம், மொழி இனம், ஜாதி அடிப்படையில் பகைமையை ஊட்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், பொதுமக்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்புதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரி மீது மதுரை திருநகர் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது நேற்று 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


