யூடியூபர் மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து!!

 
ttn

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக யூடியூபர் மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

மதுரையை சேர்ந்த பாஜக ஆதரவாளர் யூடியூபர் மாரிதாஸ் சமீபத்தில் குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்து குறித்து தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா? எதையும் செய்யக்கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால் அங்கே எந்த பெரிய சதி வேலை நடக்கவும், சாத்தியமுண்டு, பிரிவினைவாத சக்திகள் ஒதுக்கப்பட வேண்டும்  என்று குறிப்பிட்டிருந்தார். 

mari

மாநிலத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மத்திய , மாநில அரசுக்கு எதிராக கருத்து விட்டதாக வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் என்பவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்த நிலையில்,  மாரிதாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.  அத்துடன் அவரை 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதன் அடிப்படையில் அவர் உத்தமபாளையம்  சிறையில் அடைக்கப்பட்டார். 

ஆனால் இந்த வழக்கை எதிர்த்து மாரிதாஸ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார் . மனுவை நீதிபதி ஸ்வாமிநாதன் விசாரித்து வந்த நிலையில்,  முப்படை தலைமை தளபதியின் மரணத்திற்கு காரணம் தமிழக அரசு என்பது போல் தமிழக அரசின் மீது குற்றம் சாட்டும் வகையில் மாரிதாஸின்  கருத்து இருந்தது. திமுக ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே பிரச்சினையை ஏற்படுத்தி .தமிழகத்தில் அமைதியை குலைக்கும் வகையிலும் அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்பும் வகையிலும் இருந்தது. அதனால் அவர் கைது செய்யப்பட்டதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் வாதிட்டார்.

mari

ஆனால் மாரிதாஸ் தரப்பு வழக்கறிஞரோ,   தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகள் ஒழிக்கப்படவேண்டும் திக.,   திமுகவை சேர்ந்த பலர் முப்படை தலைமையில் தளபதியின் மரணத்தைக் கொண்டாடும் வகையில் பதிவிட்டுள்ளனர். பகிர்ந்துள்ளனர். அவரது பதிவில் கட்சி குறித்தோ  மதம் குறித்தோ, சமூகம் குறித்தோ கருத்து இல்லை. தமிழக அரசுக்கு எதிராகவோ முதல்வருக்கு எதிராகவோ  எந்த கருத்தும் இல்லை என வாதிடப்பட்டது.

இந்நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயன்றதாக தொடரப்பட்ட மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாரிதாஸ் மீது பதியப்பட்ட  501(1)&(2), 124(ஏ), 504, 153(ஏ) ஆகிய  வழக்குகள் செல்லாது என உயர்நீதிமன்றக் கிளை  தெரிவித்ததுடன்,  வழக்கை ரத்து செய்தும்  உத்தரவிட்டுள்ளது. மாரிதாஸ் வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை இரண்டே நாட்களில் முடிந்துவிட்டது கவனிக்கத்தக்கது.