தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

 
annamalai

காளிகாம்பாள் கோயிலின் முன் போராட்டம் நடத்தியதால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனோ பாதிப்பின் காரணமாக தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. வழக்கம் போல பூஜைகள் மட்டுமே நடைபெறுகின்றன. அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என பாஜக அரசுக்கு கோரிக்கை விடுத்தது. அதை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, எல்லா நாட்களிலும் கோவில்களை திறக்கக் கோரி பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று போராட்டம் நடைபெற்றது.

annamalai bjp

தமிழகம் முழுவதிலும் உள்ள முக்கியமான 12 கோவில்களின் அருகே கடவுள்களின் புகைப்படங்களை ஏந்தியும் தீச்சட்டி ஏந்தியும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் பொன்ராதாகிருஷ்ணன் தலைமையிலும் நாகர்கோவில் நாகராஜா கோவில் அருகில் பாஜக எம்எல்ஏ காந்தி தலைமையிலும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில், சென்னை காளிகாம்பாள் கோவில் அருகே நடைபெற்ற போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றுக் கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கோவில் திறப்பு விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம். சிறைக்குச் செல்லவும் தயாராக உள்ளோம். டாஸ்மாக், தியேட்டர்கள் என அனைத்தும் திறக்கப்பட்டிருக்கும் சூழலில் கோவில்களில் அனுமதி மறுக்கப்படுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், சென்னையில் காளிகாம்பாள் கோவில் முன் போராட்டம் நடத்திய பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொற்றுநோய் தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் 700 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கோவையில் போராட்டம் நடத்திய வானதி சீனிவாசன் மீதும் பந்தயசாலை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.