இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு, அஸ்மிதா உள்ளிட்ட குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு..
இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு மற்றும் அவரது மனைவி அஸ்மிதா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குடும்பமாக சேர்ந்து ஆன்லைன் பங்குச்சந்தை மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அண்மைக்காலமாக செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருபவர்கள் பிரபல யூடியூபர் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலங்களான விஷ்ணு - அஷ்மிதா தம்பதி. பல சர்ச்சைகள், வழக்குகள் என பேசுபொருளாகி வரும் விஷ்ணு - அஷ்மிதா மற்றும் அவர்களது குடும்பத்தினர் 4 பேர் மீது ஆன்லைன் டிரேடிங் மோசடி தொடர்பாக சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
சந்திரசேகர் என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு , தன்னையும் தன் மகள்களையும் அணுகி ஃபோரெக்ஸ் ஆன்லைன் ட்ரேடின்கில் முதலீடு செய்தால் 4 சதவீத கூடுதல் லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைக் கூறியதாகவும், தொடர்ந்து சிறிது சிறிதாக ரூ.50 லட்சம் பின்னர் ரூ. 60 லட்சம் என மொத்தமாக ரூ. 1 கோடியே 62 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாகவும் சந்திர சேகர் புகார் அளித்திருக்கிறார். குடும்பமாக சேர்ந்து தங்களை ஏமாற்றி விட்டதாகவும் அவர் புகாரில் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு, மேக்கப் ஆர்டிஸ்ட் அஷ்மிதா அவரது தாய் மற்றும் தந்கை என 4 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே விஷ்ணு ஒரு பெண்ணிற்கு தவறாக மெசேஜ் அனுப்பியதோடு, அவரது வீட்டிற்குள் நுழைந்ததாக கூறி அவரது சகோதரர்கள் சேர்ந்து விஷ்ணுவை தாக்கிய வீடியோ இணையதளங்களில் வைரலானது. இதனையடுத்து இருவரும் மாறி மாறி காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இதன் தொடர்ச்சியாக மேக்கப் ஆர்டிஸ்ட் அஷ்மிதா, தனது கணவர் விஷ்ணு தன்னை தாக்குவதாகவும் துன்புறுத்துவதாகவும் கூறி விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் விஷ்ணு ஏற்கனவே சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது விஷ்ணு, அவரது மனைவி உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பத்தினர் மீதும் மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


