பிரதமர் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்குப்பதிவு

 
congress Protest

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள்கள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத்தை திறந்து வைத்தார். அதன் பிறகு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்  சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தொடங்கி வைத்தார். இது இந்தியாவின் 11வது வந்தே பாரத் ரயில் சேவையாகும்.  தொடர்ந்து  விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.  பிறகு,  பல்லாவரத்தில் இருக்கக்கூடிய மைதானத்தில்,   ரூ.294 கோடி மதிப்பிலான 3 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.   

இதனிடையே பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை  வள்ளுவர் கோட்டத்தில் கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.எல்.ஏ.க்கள் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 600 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, நிர்வாகிகள் செல்வப்பெருந்தகை, திரவியம் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், சென்னை காவல் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.