அதிமுகவினர் அதிர்ச்சி! எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

 
eps

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வேட்புமனுவில் சொத்துமதிப்பை குறைத்து காட்டியதாக அளித்த புகாரின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி மீது மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த தேர்தலின்போது போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தங்களின் சொத்து விபரங்களை வேட்புமனுவுடன் தாக்கல் செய்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிச்சாமியும் வேட்புமனுவுடன் சொத்து விபரங்களை தாக்கல் செய்தார். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றியும் பெற்றார். இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி தனது வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்ததாக புகார்கள் எழுந்த நிலையில்,  இதுதொடர்பாக தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த மிலானி என்பவர் சேலம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 அதில், 2021 சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு பிரமாண பத்திரத்தில் எடப்பாடி பழனிச்சாமி சொத்து விபரங்களை மறைத்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம் புகார் குறித்து விசாரித்து, முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், புகாரின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் 125ஏ(1), 125ஏ(I), 125ஏ(II) பிரிவுகளின் கீழ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.