அரசியல் கட்சிகளின் ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக்கோரி ஐகோர்டில் வழக்கு

 
Highcourt Highcourt

கரூர் துயரம் போல் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ போன்ற நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டி நடைமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொங்கு மண்டலத்தை தொடர்ந்து மதுரை: விஜய்யின் ரோடு ஷோ எப்போது? - Cinemapettai

கரூரில், த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ-க்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி,  சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், கரூர் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், த.வெ.க. தலைவர் விஜய், குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்படவில்லை. அவர், ஏழு மணி நேரம் தாமதமாக வந்ததால் தான் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்காதபடி, அனைத்து அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ-க்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும்.  நெறிமுறைகளை மீறும் பட்சத்தில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர், ரோடு ஷோ-வில் பேசுவோர் மீதும்  குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகளை அழைத்து வருவதை காவல் துறையினர் தடுக்க வேண்டும். பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கக்கூடாது என காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும். கரூர் துயர சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன், அக்டோபர் 3ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.