பட்டியலின மக்கள் வழிபட எதிர்ப்புத் தெரிவித்த 7 பேர் மீது வழக்குப் பதிவு - கோயிலுக்கு சீல்

 
temple seal temple seal

கும்மிடிப்பூண்டி அருகே கோவிலில் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக பெண் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்று சமூகத்தினரின் பட்டா வழியில் பட்டியலின சமூகத்தினர் ஆலயத்திற்கு செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் அருள்மிகு எட்டியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. 1998ல் கட்டப்பட்ட இந்த ஆலயம் பிறகு அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இந்த ஆலயத்திற்கு கடந்த 2002 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற போது பட்டியலின மக்கள் கோவிலில் வழிபாடு செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அப்போது ஆலயத்திற்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. பிறகு இருதரப்பினர் இடையே ஏற்பட்ட உடன்பாடு காரணமாக 2012 ஆம் ஆண்டு சீல் அகற்றப்பட்டிருந்தது. இருந்த போதிலும் பட்டியலின மக்கள் அங்கு சென்று வழிபட எதிர்ப்பு நீடித்ததால் அந்த ஆலயத்திற்கு சென்று வழிபடாமலே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 


இந்நிலையில் புணரமைப்பு பணிகள் முடிவடைந்து எட்டியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா கடந்த 9ஆம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு சென்ற போது மாற்று சமூகத்தினர் தங்களுக்கு சொந்தமான பாதையில் வரக்கூடாது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்படாததால் ஆலய கதவுகளை பூட்டி சீல் வைத்தனர். இந்நிலையில் சீல் வைக்கப்பட்ட ஆலயத்திற்கு முன்பாகவும், இரண்டு தரப்பினரின் குடியிருப்பு பகுதிகளிலும் காவல்துறையினர் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே கோவிலில் வழிபாடு மறுக்கப்பட்ட பட்டியலின மக்கள் தரப்பில் சரவணன் என்பவர் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழுதலம்பேடு ஊராட்சி மன்ற பெண் தலைவர் உட்பட 7பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பட்டியலின மக்களை வழிபாடு செய்ய விடாமல் தடுத்ததாக வழுதலம்பேடு சேர்ந்த தேவராஜ், ரகுநாதன், சுப்பிரமணி, ஊராட்சிமன்ற தலைவர் மணிமேகலை, எட்டியப்பன், முருகன், முனுசாமி ஆகிய 7பேர் மீது பட்டியலின வன்கொடுமை தடுப்பு சட்டம், சட்டவிரோதமாக கூடுதல், அரசு அதிகாரி உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 7பிரிவுகளில் கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆலயத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் பட்டியலின மக்களை வழிபாடு செய்ய விடாமல் பொது இடத்தில் அவமதித்ததாக மாற்று சமூகத்தினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.