ரயில் மறியல் - கே.எஸ்.அழகிரி உள்பட 238 பேர் மீது வழக்குப்பதிவு

 
tn

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மோடி சமூகம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக சூரத் பெருநகர மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் , அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  அத்துடன் அவர் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதையடுத்து சூரத் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்  முறையீட்டு மனுவை தாக்கல் செய்த நிலையில்,  அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.  அத்துடன் தனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

protest

குஜராத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி சென்னை எழும்பூரில் ரயில் மறியலில் காங்கிரசார் ஈடுபட்டனர்.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ரயில் மறியல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

ks alagiri

இந்நிலையில் சென்னை எழும்பூரில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி, எம்எல்ஏ உள்பட 238 பேர் மீது சென்னை எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.