பெண் பேராசிரியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது வழக்குப்பதிவு
நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பெண் பேராசிரியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 2019ல் நல்ல அபிஷேக பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேதியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார். தொடர்ந்து படிப்பு முடிந்ததும் அங்கேயே தற்காலிக பேராசிரியராக சில ஆண்டுகளாக பணியாற்றினார். இந்நிலையில் ஆராய்ச்சி படிப்பு படித்துக் கொண்டிருக்கிற போது அங்கு வேதியல் துறை பேராசிரியராக பணியாற்றி வந்த அமையச் சேர்ந்த கண்ணன் 55, என்பவர் பாலியல் ரீதியாக தனக்கு தொந்தரவு செய்ததாகவும், தனது ஆராய்ச்சி படிப்பை முடிப்பதற்கு பல்வேறு தடைகளை அவர் ஏற்படுத்தியதாகவும் இளம்பெண் மாநில மகளிர் ஆணையம், பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அளித்தார்.
அதனைத் தொடர்ந்து மகளிர் ஆணை அதிகாரிகள் பல்கலைக்கழகத்தில் நேரடி விசாரணை நடத்தினர். இதற்கிடையில் இளம்பெண் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், கல்லூரி மாணவியாக இருந்தபோது பேராசிரியர் கண்ணன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், தற்போது தற்காலிக பேராசிரியராக பணியாற்றி வரும் நிலையில் அங்கு படிக்கும் மாணவர்களை எனக்கு எதிராக தூண்டிவிட்டு அசவுகரியமான சூழ்நிலை உருவாகும் குறிப்பிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் நெல்லை மாநகர மேற்கு மண்டல துணை கமிஷனர் கீதா, டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெகதா உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த நிலையில் அவரது புகார் மனு குறித்து பல்கலைக்கழக அளவில் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்த துணைவேந்தர் உத்தரவிட்டார். விசாரணை துவங்கிய நிலையில் இளம்பெண் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் பேராசிரியர் கண்ணன் மீது 354 a பாலியல் துன்புறுத்தல் என்ற பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.


