அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயர்களை பயன்படுத்தக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

 
high court

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயர்களை பயன்படுத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம்  தெரிவித்துள்ளது.  

கள்ளக்குறிச்சியில்  விஷச் சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.  அதன்படி இந்த வழக்கை  நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வும் விசாரித்து வந்தது. இந்த வழக்கு கடந்த புதன்கிழமை (ஜூலை 24) அன்று விசாரணைக்கு வந்த போது,   நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  

அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயர்களை பயன்படுத்தக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

மேலும் அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து  கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கைகள் தயாராகி வருவதாகவும், நாளை மறுநாள் அந்த அறிக்கையை சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார்.  இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 26-ம் தேதிக்கு( அதாவது இன்றைக்கு) தள்ளிவைத்தனர்.   

kallar Schools

அதன்படி இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கல்வராயன் மலை பகுதி தொடர்பாக தமிழக அரசு இன்று அறிக்கை தாக்கல் செய்தது.  அறிக்கையை பார்த்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணி, அரசு தரப்பிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். அதாவது, மலைப்பகுதிகளில் 150 பள்ளிகளில் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த பள்ளிகளில்  அடிப்படை வசதிகள் முழுமையாக உள்ளதா? எனவும், பள்ளிகளில் சாதிப்பெயர் இருப்பதைக் குறிப்பிட்டு மக்கள் வரிப்பணத்தில் நடத்தும் அரசு பள்ளியில் சாதி பெயரில் இருக்கலாமா? எனவும் கேள்வி யெழுப்பினார்.  தெருக்களில் உள்ள சாதி பெயரை மாற்றியது போல,  அரசு பள்ளிகளில் உள்ள சாதி பெயரையும் நீக்கி விடுங்கள் எனவும்   நீதிபதி எஸ். எம்.சுப்பிரமணியம் அறிவுறுத்தினார்.