காவிரி விவகாரம்- நாளை அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர் கூட்டம்
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக நாளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக தினமும் ஒரு டி.எம்.சி (வினாடிக்கு 11,500 கன அடி) தண்ணீரை திறந்து விடும்படி காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணையிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 8000 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்று பெங்களூருவில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிறகு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்திருக்கிறார். காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவின் ஆணைப்படி தமிழகத்திற்கு திறந்து விடும் அளவுக்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்றும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்று கொள்ளாது. காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்களின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை நாளை (16.07.2024) காலை 11.00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்டிட ஆணையிட்டுள்ளேன். இக்கூட்டத்தில் அனைவரையும் கலந்தாலோசித்து, சட்ட வல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று, தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


