மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு

 
நேரு

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் பேரில் அமைச்சர் கே.என்.நேரு தண்ணீர் திறந்துவிட்டார்.

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு  மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால்,  டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் தான், கர்நாடகாவில் இருந்து தண்ணீரை பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுத்து வந்த நிலையில் தென்மேற்கு பருவமழை , நமக்கு கை கொடுத்துள்ளது.

அதாவது கடந்த சில நாட்களாக  கேரளா மாநிலம் வயநாடு, மற்றும் கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜா சாகர் அணைகள் நிரம்பி, அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி, அங்கிருந்து உபரி நீர் , காவிரியில்  வெளியேற்றப்பட்டு வருகிறது . இதனால் கடந்த 17ஆம் தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 


 
மேட்டூர்  அணைக்கான நீர்வரத்து ஒரு லட்சத்து 48 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கும் நிலையில் அணையின் நீர்மட்டம் 110 அடியாக உள்ளது. இந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூரில் இருந்து 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதன் பேரில் அமைச்சர் கே.என்.நேரு, பிற்பகல் 3 மணி அளவில் மேட்டூர் அணையின் வலது கரையில் உள்ள மேல்மட்ட மதகு பகுதியில் உள்ள மின் விசையை இயக்கி அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட்டார். இதனையடுத்து அணையில் இருந்து தண்ணீர் மேல் மட்ட மதகுகள் வழியாக சீறி பாய்ந்தது அதனை வரவேற்கும் விதமாக தண்ணீரில் பூக்களை தூவியும், விதை நெல் மற்றும் நவதானியங்களை தூவி காவிரியை வரவேற்றனர்.