"ADGP ஜெயராம் வழக்கை CBCID விசாரிக்கும்" - தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்..
சிறுவன் கடத்தல் விவகாரத்தில் ஏடிஜிபி ஜெயராம் மீதான வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட புகாரில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏ-வுமான ஜெகன் மூர்த்தி மற்றும் இந்தக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக காவல்துறை ஏடிஜிபி ஜெயராம் ஆகியோ போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏடிஜிபி ஜெயராமுக்கு கடத்தலில் தொடர்பு இருப்பதாகவும், அவருடைய வாகனம் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சீருடையில் நீதிமன்றத்தில் ஆஜரான ஏடிஜிபி ஜெயராமை , போலீஸார் ஜூன் 16 மாலை நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்தனர். ஆள் கடத்தல், குற்றச்செயலில் ஈடுபடும் கும்பலுடன் தொடர்பு உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருத்தணியை அடுத்த திருவாலங்காடு டிஎஸ்பி அலுவலகத்தில் வைத்து ஏடிஜிபி ஜெயராமிடம் 24 மணி நேர விசாரணைக்குப் பின்னர் அனுப்பிவைக்கப்பட்டார். இதனிடையே தமிழ்நாடு காவல்துறையின் பரிந்துரையை ஏற்று ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், தன்னை கைது செய்ய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கை நேற்று (ஜூன் 18) விசாரித்த நீதிபதிகள் உஜ்ஜல் புயன், மன்மோகன் அமர்வு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வங்கியுள்ள நிலையில் அவர் எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்? என்று கேள்வி எழுப்பினர். அவரது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரனைக்கு வந்தபோது, தற்போதைய நிலையில் ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கத்தை திரும்ப பெற போவதில்லை என்றும், விசாரணையைக் கருத்தில் கொண்டு ஜெயராமன் சஸ்பென்ட் தொடர வேண்டும் என தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உயர்பதவியில் உள்ள ஒருவர் விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை என்றும், அது தொடரும் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் பணியிடை நீக்கம் என்பது தொடர வேண்டும் என்றும் தெரிவித்துள்ள தமிழக அரசு இடைநீக்கம் செய்த ஆவணங்களை தாக்கல் செய்ததுள்ளது.
இதனையடுத்து விசாரணையில் சிஐடி அல்லது காவல்துறையின் வேறு பிரிவுக்கு மாற்ற முடியுமா என்பதை அரசுடன் கேட்டு உடனடியாக கூறுங்கள் எனக்கூறி வழக்கு விசாரணையை நீதிபதிகள் சிறிது நேரத்துக்கு ஒத்திவைத்தனர். பின்னர் மீண்டும் தமிழக அரசு தரப்பில், கூடுதல் டிஜிபி ஜெயராமன் தொடர்புடைய விசாரணையை சிபிசிஐடி விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.


