பிஆர்எஸ் தலைவர் கவிதாவை கைது செய்தது சிபிஐ..!

 
1 1

திகார் சிறையில் இருக்கும் கே. கவிதாவை சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனர்.

தென்னிந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ. 100 கோடி லஞ்சம் வழங்கியதாக கூறப்படுகிறது. அதற்கு ஆதாயம் தேடித்தரும் வகையில் புதிய மதுபானக் கொள்கை மூலமாக லைசென்ஸ் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. விசாரணை அமைப்புகளால் சவுத் குரூப் என அழைக்கப்படும் இதில் முக்கியமான நபராக தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், எம்எல்சியுமான கே. கவிதா இருப்பதாகக் கூறப்படுகிறது.

மதுபான கொள்கை ஊழலில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் பற்றி அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக கவிதா, மார்ச் 15ம் தேதி பஞ்ஜார ஹில்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து அமலாக்கத்துறையால் கைது செய்யட்டார். டெல்லி ரோஸ் அவின்யூ நீதிமன்றம் ஏப்ரல் 23ம் தேதி வரை அவரது நீதிமன்றக் காவலை நீடித்து உத்தரவிட்டது.

இதற்கிடையே கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவரிடம் நீதிமன்ற அனுமதி பெற்று கடந்த 6ம் தேதி, சிபிஐ விசாரணை நடத்தியது. அப்போது, உடன் குற்றவாளியான புச்சி பாபு போனில் இருந்த வாட்ஸ்அப் சாட்கள் மற்றும் மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான நில ஒப்பந்தங்கள் பற்றி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று சிபிஐ கவிதாவை கைது செய்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தில் குற்றச்சதி மற்றும் பொய்யான ஆவணங்கள் தயாரித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.