தவெக தலைவர் விஜயிடம் நாளை நடைபெறுவதாக இருந்த சிபிஐ விசாரணை ஒத்திவைப்பு..!

 
1 1

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரமான சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக நேரில் ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட அழைப்பாணையை ஏற்று, நடிகர் விஜய் நேற்று (ஜனவரி 12) டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஆஜரானார். காலை தொடங்கிய இந்த விசாரணை சுமார் 7 மணி நேரம் நீடித்தது.


இந்த விசாரணையின் போது, கூட்டத் திட்டமிடல், பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் விபத்து நடந்த நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விஜய்யிடம் சுமார் 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. விஜய் அளித்த பதில்கள் அனைத்தும் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டு, இறுதியில் அவரிடம் கையொப்பமும் பெறப்பட்டது. விசாரணை முடிந்து வெளியேறிய விஜய், நேற்று இரவு டெல்லியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் தங்கினார். மேலும் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


விசாரணையின் முடிவில், வரும் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு மீண்டும் விசாரணைக்கு ஆஜராக விரும்புவதாக விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை சிபிஐ அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். இருப்பினும், அடுத்த கட்ட விசாரணைக்கான சரியான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.