விஜய் பிரசார வாகனம் பறிமுதல்: சி.பி.ஐ. அதிரடி..!

 
1 1

கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் நடைபெற்ற த.வெ.க. பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டத்திற்கு முறையாகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதா? விதிமீறல்கள் நடந்தனவா? என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே கடந்த நவம்பர் 25-ம் தேதி, த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் டெல்லியில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இவர்களிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

நிர்வாகிகளைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 4-ம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு சி.பி.ஐ. அதிகாரிகள் முன் ஆஜரானார். கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட விதம் மற்றும் அங்கு நிலவிய பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து அவரிடம் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் காவல்துறை உயரதிகாரிகளிடமும் சி.பி.ஐ. தரப்பில் தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

வழக்கின் ஒரு முக்கிய நகர்வாக, விஜய் தனது பிரசாரத்திற்காகப் பயன்படுத்தும் நவீன வசதிகள் கொண்ட வாகனத்தை (Bus) சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். பனையூரில் இருந்த இந்த வாகனத்தைக் கரூர் கொண்டு சென்ற அதிகாரிகள், அதில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அந்த வாகனத்தின் ஓட்டுநரைப் பிடித்து, கூட்டத்தின் போது வாகனத்தின் இயக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிர்வாகிகள் மற்றும் வாகன ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 12-ம் தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் அவர் நேரில் ஆஜராக வேண்டும். இந்த விசாரணைக்காக விஜய் வரும் 11-ம் தேதியே டெல்லி செல்ல உள்ளார். கட்சித் தலைவரிடமே நேரடியாக விசாரணை நடத்தப்பட உள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.