திண்டுக்கல் நிறுவனத்தில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் சோதனை..!

 
1

திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் சேர்க்கப்படும் நெய், தரப் பரிசோதனை செய்யப்பட்டதில், விலங்குகள் கொழுப்பு, மீன் கொழுப்பு கலந்திருப்பதாக செய்திகள் வெளியாகின. லட்டு பிரசாதத்துக்கான நெய் விநியோகம் செய்தது திண்டுக்கல்லைச் சேர்ந்த தனியார் பால் பொருள்கள் தயாரிப்பு நிறுவனம் என்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நெய் வழங்கிய திண்டுக்கல்லைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சேர்த்து ஆந்திர அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில், திண்டுக்கல்லில் அமைந்துள்ள தனியார் பால் பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்தில் மத்திய மற்றும் மாநில உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை காலை முதல் சோதனை செய்தனர்.

திருப்பதிக்கு நெய் வழங்கிய திண்டுக்கல்லைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டு பணியாளர்கள் மூலம் வெள்ளிக்கிழமை விளக்கம் அளிக்கப்பட்டது. “திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் இரு தவணைகளில் எங்கள் நிறுவனத்தின் சார்பில் நெய் அனுப்பப்பட்டது. எங்களது நிறுவனத்தின் தயாரிப்பில் 0.5 சதவீதம் மட்டுமே திருப்பதிக்கு அனுப்பப்பட்டது. தற்போது அங்கு நெய் அனுப்புவது கிடையாது. திருப்பதிக்கு அனுப்பிய நெய்யின் தரம் குறித்த ஆய்வு அறிக்கையின் தரவுகளும் எங்களிடம் உள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்துக்கு பல நிறுவனங்களிலிருந்து நெய் அனுப்பப்படுகிறது. இதில், எங்கள் நிறுவனம் அனுப்பியது 0.1 சதவீதம்கூட இருக்காது. உணவுப் பாதுகாப்புத் துறை, அக்மார்க் சார்பில் எங்கள் நிறுவனத்திலுள்ள நெய்யை தர மாதிரிக்கு சேகரித்துச் சென்றனர்” எனத் தெரிவித்தனர்.