உருவாகிறது புயல்! தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 
rain

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று 7-ஆம் தேதி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் 8-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 9-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.  இதன் காரணமாக இன்று (07.05.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு. நீலகிரி, கோயம்புத்தூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பதார், அரியலூார், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்,  நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

rain

8.05.2023 முதல் 10.05.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.