அடுத்த 2 மணி நேரத்தில்... 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 
rain

தமிழகத்தில் கடந்த 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதற்கு முன்னதாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. நீலகிரி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடர்கிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக அடுத்த இரண்டு நாட்களில் தென்தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

rain

அதன் படி நேற்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. தொடர் மழை காரணமாக நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்து வரும் நாட்களில் மேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரைப் பகுதியில் நிலவக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த இரண்டு மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மற்றும் தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.