7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

 
rain

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்ப்பதால் ஏரிகள், அணைகள் என அனைத்தும் நிரம்பி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு தமிழகத்தில் கூடுதலாக மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

rain

இந்நிலையில், மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை யும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் காரைக்காலிலும் இடி மின்னல் கூடிய கனமழையும் புதுச்சேரி உள்ளிட்ட சில இடங்களில் மிதமான மழையும் பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.