மீண்டும் பரபரப்பை கிளப்பிய சந்திராபு நாயுடு..! திருப்பதி லட்டுகளில் குளியலறை ரசாயனங்கள்..!
திருப்பதி லட்டில்குளியலறைகளைச் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் கலந்த நெய்யில் தயாரிக்கப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆந்திராவில், கடந்த 2019 - 24 வரையிலான காலக்கட்டத்தில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல் வராக இருந்தார். இதையடுத்து, நடந்த சட்டசபை தேர்தலில், தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
முதல்வராக பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடு, முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சியில், திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதமான லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டினார். உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக, 15 மாதங்களுக்கு மேலாக சி.பி.ஐ., தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. சமீபத்தில், இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், 'லட்டு தயாரிக்க பயன் படுத்தப்பட்ட நெய்யில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை' என, சிறப்பு விசாரணை குழு தெரிவித்தது.
ஆனால், நெய் கலப்பட விவகாரத்தில், 240 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், கர்னுால் மாவட்டத்தின் கழுகுட்லா பகுதியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில், முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ஆந்திராவில் முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்., அரசு, திருப்பதி வெங்கடாஜலபதியின் புகழை கெடுக்கும் நோக்கில், குளியலறைகளை சுத்தம் செய்யும் ரசாயனங்கள் கலக்கப்பட்ட நெய்யை, லட்டு தயாரிக்க ஐந்து ஆண்டுகளாக பயன்படுத்தினர்.
இதில், இரண்டு வகை உள்ளன. சில தாவர அடிப்படையிலானவை; அவை விலை உயர்ந்ததும் கூட. ஆனால், விலங்கு கொழுப்பால் தயாரிக்கப்பட்ட நெய்யின் விலை குறைவு. இதைப் பயன்படுத்தி நெய் தயாரிக்கப்பட்டதாக தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் அறிக்கை அளித்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.


