விஜயின் மக்கள் சந்திப்பில் மாற்றம்... மேலும் இரண்டு மாதங்கள் நீட்டிப்பு..!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 13 ஆம் தேதி திருச்சியில் தனது மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை தொடங்கினார். கடந்த சனிக்கிழமை நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பரப்புரை செய்தார்.
டிசம்பர் 20ஆம் தேதி வரை சனிக்கிழமை தோறும் மூன்று மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அது இரண்டு மாவட்டங்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 12 வாரங்களுக்கு பதிலாக 20 வாரங்கள் பரப்புரை மேற்கொள்ளும் வகையில், தனது பயணத்திட்டத்தை விஜய் மாற்றியமித்துள்ளார். அதில், 18 நாட்கள் சனிக்கிழமைகளிலும், இரண்டு நாட்கள் ஞாயிற்றுக்கிழமையிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அதன்படி, நாளை மறுநாள் நாமக்கல், கரூர் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்கிறார். அக்டோபர் ஐந்தாம் தேதி வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், அக்டோபர் 11 ஆம் தேதி புதுச்சேரி, கடலூரிலும் பரப்புரை செய்கிறார்.
கிறிஸ்துமஸ்,புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளுக்காக டிசம்பர் 20 ஆம் தேதிக்குப் பிறகு ஜனவரி 20 ஆம் தேதி வரை விஜய் பிரச்சாரம் செய்யவில்லை. டிசம்பர் 20 ஆம் தேதி திருவள்ளூர் , காஞ்சிபுரத்தில் பிரச்சாரம் செய்யும் விஜய் , அதன் பின் மீண்டும் ஜனவரி 24 ஆம் தேதி மதுரை தேனியில் பரப்புரை செய்ய உள்ளார்.பிப்ரவரி 21 ஆம் தேதி செங்கல்பட்டில் பரப்புரை செய்யும் விஜய் அதே நாளில் சென்னையில் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை நிறைவு செய்கிறார்.


