தென்பெண்ணை ஆற்றில் மலைப்போல் குவியும் ரசாயன நுரை- அதிர்ச்சியில் கலங்கும் விவசாயிகள்

 
நுரை நுரை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு, கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் நீர்வரத்து இன்று இரண்டாவது நாளாக 981 கனஅடிநீர் தென்பெண்ணை ஆற்றிற்கு வரத்தாக உள்ளது. வரக்கூடிய நீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று தென்பெண்ணை ஆற்றில் நுரை அதிகப்படியாக காட்சியளித்த நிலையில், இன்றும் துர்நாற்றம் வீசி அதிகப்படியான நுரை ஆற்றில் பொங்கி குவியல் குவியலாக வெளியேறி வருகிறது.

ஆற்று நீரில் அதிகப்படியான ரசாயன கழிவுகள் கலக்கப்பட்டிருப்பதால், அணையில் வெளியேற்றப்படும் தண்ணீர் நீர் வீழ்ச்சி போல் கொட்டுவதால் ரசாயன கழிவுநீர் நுரையாக பொங்கி செல்வது, விவசாயிகள் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து கவலையை ஏற்ப்படுத்தி உள்ளது. மேலும் அணையிலிருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும், இடதுபுற பிரதான கால்வாயில் நுரை அதிக அளவில் பொங்கி சுமார் 5 அடி உயரத்திற்கு தேங்கி நிற்கிறது.

நுரை காற்றில் சிறு துகள்களாக பறந்தும் வருகிறது,மேலும் அணைப்பகுதியில் தற்போது சுற்றுலா தளம் அமைக்கப்பட்டு உள்ளதால் அணையை பார்க்க வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருகில் செல்ல முடியாத ஒரு சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது, அணைப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு காற்றில் பறக்கும் நுரை குழந்தைகள் மீதும் பெரியவர்கள் மீதும் விழும் போது அரிப்பு ஏற்படுவதோடு நோய் தொற்று ஏற்படுவதாகவும் கவலையுடன் தெரிவிக்கின்றனர் எனவே இரு மாநில அரசுகளும் நிரந்தர தீர்வு காண வேண்டும் என சுற்றுலா பயணிகள்  வேண்டுகோள் விடுத்தனர். இதற்கு நிரந்தர தீர்வு எப்போதுதான் கிடைக்கும் என விவசாயிகளும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்