லிம்கா சாதனையில் இடம்பிடித்த சென்னை விமான சாதனை
அதிக மக்கள் கண்டுகளித்த விமான சாகச நிகழ்ச்சி என்ற சாதனையில் இடம்பிடித்துள்ளது இன்றைய சென்னை விமான சாகச நிகழ்ச்சி.
இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவைகளின் சாகசங்கள் இடம்பெற்றன. சுகோய் சு 30, ஹெலிகாப்டர்கள், அட்வான்ஸ் லைட் ஹெலிகாப்டர் (ஏஎல்ஹெச்) ஹால் தேஜா, மல்ட்டிரோல் காம்பேட் ஏர்கிராப்ட், ரஃபேல் ஏர்கிராப்ட் உள்ளிட்ட 72 விமானங்களை விதவிதமாக இயக்கி சாகசத்தை விமானப்படை வீரர்கள் அரங்கேற்றினர்.

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த சாகச நிகழ்ச்சியை காண மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் சென்னை மெரினாவில் திரண்டனர். வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் குடை பிடித்தபடி விமானங்களின் சாகசங்களை கண்டு ரசித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளோட்டோரும் விமான சாகசத்தை வியந்து பார்த்தனர். ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் சென்னை விமான சாகச நிகழ்ச்சியை 10 லட்சம்பேர் கண்டுகளித்ததை அடுத்து அதிக மக்கள் கண்டுகளித்த விமான சாகச நிகழ்ச்சி என்ற லிம்கா சாதனையை தட்டிப்பறித்து லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுகிறது.


