ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தலைமறைவானவரின் கூட்டாளி கைது
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தலைமறைவாக இருக்கும் புதூர் அப்புவின் கூட்டாளி மாட்டு ராஜா பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 24 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கிறனர். அத்துடன் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பல்வேறு நபர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ரவுடி மொட்டை கிருஷ்ணனுக்கு இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் மனைவி மோனிஷாவிடம் இருந்து ரூ.75 லட்சம் சென்றிருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தலைமறைவாக இருக்கும் புதூர் அப்புவின் கூட்டாளி மாட்டு ராஜா பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். பட்டினப்பாக்கத்தில் மாமூல் வசூல் செய்து மிரட்டியதாக வந்த புகாரில் தனிப்படை போலீசார் மாட்டு ராஜாவை கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் வெடிகுண்டு சப்ளை செய்ததாக, புதூர் அப்புவை போலீசார் தேடி வரும் நிலையில் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மாட்டு ராஜாவுக்கு தொடர்பு உள்ளதா எனவும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.