மயான பூமிகள் பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைப்பு - சென்னை மாநகராட்சி அறிவிப்பு..
சென்னையில் முதற்கட்டமாக 155 மயான பூமிகளை தனியார் மூலம் பராமரிக்க சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு மாத இறுதியிலும் மாமன்றக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த மாமன்றக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு திட்ட பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கவுன்சிலர்கள் எடுத்துரைப்பார்கள். மேலும் புதிய திட்ட பணிகளுக்கும் மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களால் முன்மொழியப்பட்டு , அனுமதி வழங்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும். அந்தவகையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பல தீர்மானங்கள் மேயர் பிரியா முன்னிலையில் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக சென்னையில் முதற்கட்டமாக 155 மயான பூமிகளை தனியார் மூலம் பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள மயானங்களை ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணிகள் மூலம் தூய்மை படுத்தப்படுகிறது. இருப்பினும் மனிதர்களின் இறுதிச்சடங்கு நடைபெறும் இடங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு தொடர் புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து, சென்னை மாநாகராட்சி பகுதியில் உள்ள 1 முதல் 5 மண்டலத்தில் 67 மயான பூமிகளும், 11 முதல் 15 மண்டலத்தில் உள்ள 88 மயான பூமிகள் என மொத்தம் 155 மயான பூமிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ள தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மயான பூமிகளில் சேரும் மற்றும் கொட்டப்படும் கழிவுகள் தினந்தோறும் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இறுதி சடங்களின் மூலம் ஏற்படும் திடக்கழிவுகளான பூமாலை, பாடை, பானை போன்ற கழிவுகள் தினந்தோறும் அகற்றப்படும் என்றும், தூய்மை பணிகளை மேற்பார்வையிட தனி பொறியாளர் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


