மண்டல அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!

 
radhakrishnan


சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு  மண்டல அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.


தென்கிழக்கு வங்காள விரிகுடா  மற்றும் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.  குறிப்பாக சென்னையில் கிண்டி, மீனம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, எழும்பூர், சேத்துப்பட்டு, நூங்கம்பாக்கம், வேளச்சேரி, ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.  தொடர்ந்து மழைநீடிக்கும் எனவும் வானிலை மையம் அறிவித்திருக்கிறது.  மழை காரணமாக சென்னையில் 8க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. பிரதான சாலைகளில் அமைந்துள்ள சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இவற்றை சரிசெய்யும் பணியில் மாரகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 மண்டல அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!

இந்நிலையில் மண்டல அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார். அதில், “

* பகலில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
* சென்னை சாலைகளில்  நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்யவும். எங்கேனும் தண்ணீர் தேங்கினால், அதற்கான காரணத்தை கண்டறிந்து, உடனே அதை  சரி செய்ய வேண்டும்.
* ஒவ்வொரு மண்டலம்/வார்டுகளும் மழைநீர் வடிகால்களில் அடைப்புகளை சரிசெய்ய தனி குழுக்களைக் அமைத்திருக்க வேண்டும்.
*சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க  சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். சென்சார் அடிப்படையிலான எச்சரிக்கை அமைப்பு அனைத்து சுரங்கப்பாதைகளிலும் நன்றாகச் செயல்படுவதை உறுதிசெய்யவும்.
* சாலைகளில்  மரம் விழுந்தால் மரங்களை அகற்றுவதற்கு தேவையான உபகரணங்களுடன் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்”என்று அறிவுறுத்தியுள்ளார்.