இனி அனுமதியின்றி தற்காலிக கொடிக்கம்பம் அமைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!!
தமிழகத்தில் சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களை ஆக்கிரமித்து, அரசியல் கட்சிகள் இஷ்டம்போல் கொடிக் கம்பங்கள் நட்டுள்ளன. இவற்றால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் திணறுகின்றனர். பொது இடங்கள், சாலைகள், உள்ளாட்சி இடங்களில், நிரந்தரமாக கட்சி கொடிக் கம்பங்கள் அமைக்க, எந்த சட்டத்திலும் அனுமதியில்லை.
சென்னையில் அனுமதியின்றி தற்காலிக கொடிக்கம்பம், சிலைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்தல் பரப்புரை, மாநாட்டிற்காக தற்காலிக கொடிக்கம்பங்கள் மற்றும் சிலைகள் அமைக்க அனுமதி பெற வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
முன்னதாக அரசியல், மத, சங்கங்களின் நிகழ்ச்சிகளில் கொடிக்கம்பங்கள் நட வழிமுறைகள் நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. இதன்படி கொடிக்கம்பங்கள் நட சென்னை மாநகராட்சி இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம் என்றும், மதச்சார்பான நிகழ்வுகளுக்கு கொடிக்கம்பங்கள் நட 7 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், மதச்சார்பில்லாத நிகழ்வுகளுக்கு கொடிக்கம்பங்கள் நட 3 நாட்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும், கொடிக்கம்பங்கள் நட உதவி ஆணையர் அனுமதியளித்த பின் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


